வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.
கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
பெரிய வதிசயமுடனே
பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்
தார்குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த
வளர்கதிரை மலையணுகி
கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.
அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.
வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.
கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.
முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.
அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு…
……
எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.
இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.
தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது. பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.
வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர். முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். மேலும் விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.
தென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல், படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர்.
இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து ஷமுகபடாம்| என்னும் அமைப்பும் சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்று கூறப்படுகின்றது. கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்குப் பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாணவேலவர் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட்கிழமைகளில் வற்றாப்பளைக் கோயிலில் பூசையும் நிகழ்ந்து வந்தன.
அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலம் வத்தையிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர். வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தபோதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.
இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.
சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார், பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.
கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர். அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது. இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.
கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.
வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.
ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.
கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர்.
http://vattappalaikannaki.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment