பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஆலயம்
அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.
காரணப் பெயர்
இவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.
நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன. தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது “கிழவி’ எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.
ஆலய வளர்ச்சி
இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றது. 1952இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.
திருவிழாக்கள்
திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள். பொங்கல் தலமாகவும், தீர்த்தச்சிறப்பும், மூர்த்திப்பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment